மேற்குவங்க மாநிலம் ராம்புராத் பகுதியைச் சேர்ந்த பெண் திரிஷா காத்துன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலியால் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து ராம்புராத் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திரிஷாவின் வயிற்றில், ஏதோ உலோக பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவுசெய்தனர். டாக்டர் சித்தார்த் பிஸ்வாஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட தங்க சங்கிலிகள், மோதிரங்கள், காதணிகள், கைக் கடிகாரங்கள், உள்ளிட்ட 1 கிலோ 680 கிராம் எடையிலான தங்கப் பொருட்களை எடுத்தனர். இது மருத்துவர்கள் மட்டுமல்லாது, அப்பெண்ணின் உறவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்போது அந்த பெண்ணிற்கு எந்த பாதிப்பு இல்லை என்றும், அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.