கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை இன்று நிறைவு செய்தார். அமலாக்கத்துறை தனது வாதங்களை மத்திய அரசு துணை தலைமை வழக்கறிஞர் ராஜூ மூலமாக டிசம்பர் 18ஆம் தேதி வைக்கவுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் தடயங்களை அழிப்பதற்கு சுங்கத்துறை அலுவலர்களை சிவசங்கர் தொடர்புகொண்டதாக அமலாக்கத்துறை வைத்த குற்றச்சாட்டை மறுத்த சிவசங்கர் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, அவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் அறிக்கை நம்பத்தகுந்தது அல்ல என்றும் அவை ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்ட பின்பு உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.
மேலும், அவர் தனது வாதத்தில், "ஸ்வப்னா சுரேஷ் அவரது கடிதத்தில், தனது வாடிக்கையாளர் தங்கக் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதை, தான் கைது செய்யப்படுவதற்கு முன்புவரை மறுத்துள்ளார். அதேநேரம், அமலாக்கத் துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றத்தை பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அடையாளம் காணவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளது.
குற்றத்தை அடையாளப்படுத்தாமலே, பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் எப்படி அது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட குற்றம் என்று வரையறுக்க முடியும்? முதலில் தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கர் மீது குற்றஞ்சாட்டிய அமலாக்கத்துறை, தற்போது, லைஃப் மிஷன் திட்டத்தில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறுவது பொருந்தாது.
லைஃப் மிஷன் திட்டதிற்கென்று ஒரு சிஇஓ உள்ளார். இந்தத் திட்டத்தில் எந்த பங்களிப்பையும் சிவசங்கர் செய்யவில்லை. லைஃப் மிஷன் திட்டம் முறைப்படி ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஆவணங்களும் பொதுவெளியில் உள்ளன. அதை யாரும் சிதைக்க முடியாது. என் கட்சிக்காரர் தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றங்களை ஏற்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை" என்றார்.
சிவசங்கர் தரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை டிசம்பர் 18ஆம் தேதி வைக்குமாறு கூறி வழக்கை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, சிவசங்கரின் பிணை மனு நவம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல் வழக்கு : சிவசங்கருக்கு நெருக்கடி அதிகரிக்கிறது