தங்கக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் சுங்கத் துறை அலுவலர்கள் இன்று என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு சரக்கு வந்தது. சுங்கத் துறை அலுவலர்கள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால், அதனை பயன்படுத்தி தங்கக் கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது.
இந்தக் கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அலுவலராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது. தங்கக் கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், கண்ணீர் மல்க பேசும் ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில், தனக்கும் அந்த சரக்கு பொட்டலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ஸ்வப்னாவை தேடிவந்த கேரள காவல் துறையினர், நேற்று பெங்களூருவில் வைத்து அவரையும், அவரின் நண்பரான சந்தீப் நாயரையும் கைது செய்தனர்.
தங்கக் கடத்தல் மட்டுமின்றி ஹவாலா பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சட்ட விரோத செயலில் இவர்கள் ஈடுப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. கடத்தல் கும்பல் பணத்திற்கு பதில் தங்கத்தை பயன்படுத்தி வந்ததும் சுங்கத்துறையினர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.