சர்வதேச காதுகேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா தங்கம் வென்றுள்ளார். மேலும், இரட்டையர் பிரிவு, இரட்டையர் கலப்புப் பிரிவில் இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இது குறித்து ஜெர்லினின் தந்தை செய்தியாளர்கள் சந்திப்பில், "எனது மகள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் தனக்கு எதிராக விளையாடிய ஜெர்மனியைச் சேர்ந்த ஃபின்ஜா ரோசெண்டாகியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மிகக் கடுமையான ஆட்டமாக இருந்தபோதிலும் ஜெர்லினின் ஒவ்வொரு ஷாட்டும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. இதே போன்று இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
கடந்தாண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா-பசிபிக் பேட்மிண்டன் போட்டிகளிலும் ஜெர்லின் பதக்கங்களை வென்றார். வருகின்ற 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜெர்லின் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பயிற்சியாளர் சரவணன், உதவிப் பயிற்சியாளர் நவீன் ஆகியோரின் ஊக்கமும், அவ்வை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நண்பர்களின் ஊக்கமும் உதவியும்தான் ஜெர்லின் சாதனைக்கு மிக முக்கியக் காரணம்.
மேலும், தற்போது நடைபெற்றுவரும் தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றால் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், 'ஜெர்லின் அனிகா சர்வதேசப் போட்டியில் பதக்கங்களைக் குவித்துள்ளார் என்பது மிகவும் பாராட்டிற்குரியது' என பெருமிதத்துடன் தெரிவித்தார்" எனக் கூறினார்.