கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சதயமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஷூஜா உல்முக் - விஷாஹினா. ஆசிரியர்களான இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்திற்கு உரம் போட அதேப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரிடம் சாணங்களை வாங்கியுள்ளனர். அந்த சாணங்களை உடைத்து உரமாக்கிய போது, ஒரு சாணத்தில் தங்க சங்கலி ஒன்று இருந்ததும், அதில் அலியாஸ் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து அந்தச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதனை புகைப்படம் எடுத்து கட்செவிஅஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தம்பதி மேற்கொண்ட இந்த முயற்சிக்கு பலனும் கிடைத்தது. அவர்கள் வசிக்கும் சதயமங்கலத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துடயனூர் தெக்கில் என்ற கிராமத்தில் வசிக்கும் இலியாசு என்பவர்தான் தங்க சங்கிலிக்கு சொந்தகாரர் என்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்ற அவர்கள் இலியாசிடம் சங்கிலியை ஒப்படைத்தனர். அதை வாங்கிக் கொண்ட அவர் ஆசிரியர் தம்பதிக்கு நன்றி தெரிவித்தார்.
இரண்டு வருடத்திற்கு முன்பு மாயம்
சங்கிலி காணாமல்போனது குறித்து இலியாஸ் கூறியதாவது, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி வயல்வெளியில் காணாமல்போனது. வயல்வெளி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வயலில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த எங்களது மாடு புல்லுடன் இதைச் சேர்த்து தின்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் அந்த மாட்டை விற்பனை செய்துவிட்டோம். தற்போது அந்த மாடும் பல கைமாறிவிட்டது. ஆனாலும் அந்த மாட்டின் சாணம் மூலம் தங்கச் சங்கிலி திரும்பக் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். இரண்டாண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த ஆசிரிய தம்பதியை பலரும் பாராட்டிவருகின்றனர்.