கர்நாடகா மாநிலத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை அனைத்து பகுதியும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெல்காம் மாவட்டத்தில் கோகாக் தாலுகாவிலுள்ள குஜனாலா கிராமத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் பந்தெம்மா தேவி சிலை அடித்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள அங்கலாகி கிராமத்தில் கரை சேர்ந்தது. இதனால், அங்கலாகி கிராம மக்கள் பந்தெம்மா தேவி சிலை தங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து, குஜனாலா கிராம இளைஞர்கள் தங்களது சிலை அங்கலாகி கிராமத்தில் இருப்பதை அறிந்து அவர்களிடம் சண்டையிட்டு வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு சிலையை பெற்றுச் சென்றனர். சாமி சிலைக்காக இரு கிராம மக்கள் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.