கடந்த ஜனவரி ஏழாம் தேதி, கோ ஏர் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த விமானி ஒருவர், பிரதமருக்கு எதிராக அவதூறு கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சர்ச்சை கருத்தை பதிவிட்ட விமானியை, கோ ஏர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து கோஏர் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஊழியர்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள், சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும்.
தனிநபரின் செயலுக்கும், கருத்துக்கும் எந்த வகையிலும் நிறுவனம் பொறுப்பாகாது. பிரதமருக்கு எதிராகச் சர்ச்சை கருத்தைப் பதிவிட்டவர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையில், பணிநீக்கம் செய்யப்பட்ட கோ ஏர் விமானி ட்விட்டரில் மன்னிப்புக் கோரியுள்ளார். அந்த ட்வீ்ட்டில், "பிரதமர் உள்பட வன்முறையைத் தூண்டும் வகையிலான ட்வீட்களை பதிவிட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது கருத்துக்கும் கோ ஏர் நிறுவனத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இது எனது தனிப்பட்ட கருத்துகள்தான். இதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். எனது செயல்கள், தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.