கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், நேற்று அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவா பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக இன்று மதியம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னணியைச் சேர்ந்த விஜய் சர்தேசாயும், மஹாராஷ்டிரவாடி கோமன்டக் கட்சி எம்எல்ஏ சுதின் தாவலிக்கார் ஆகியோரும் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நாளை அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரியுள்ளதாக பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "எங்கள் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்" என, தெரிவித்துள்ளார்.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவையில், ஏற்கெனவே மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மனோகர் பரிக்கரின் மறைவுக்குப் பிறகு இது நான்காக அதிகரித்துள்ளது. மிதமுள்ள 36 தொகுதிகளில் காங்கிரஸிடம் 14 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 11 எம்எல்ஏக்களும் உள்ளனர். மஹாராஷ்டிரவாடி கோமன்டக் கட்சி (MGP), கோவா முன்னணி (GFP) ஆகிய கட்சிகளிடம் தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 1 எம்எல்ஏவும், 3 சுயட்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில், கோவா முன்னணி, மஹாராஷ்டிரவாடி மற்றும் 3 சுயட்சைகளின் ஆதரவுடன் தங்கள் கட்சிக்கு 21 எம்எல்ஏக்களின் பலம் உள்ளதாக பாஜக கூறி வருகிறது.