இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு மாநில அரசுகள் அழைத்துச் செல்லலாம் என்று உள் துறை அமைச்சகம் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி கோவா மாநிலத்தில், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சேவை தேவை என்பதால், சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர்களிடம் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவாவுக்கு மனிதவளம் தேவை. அவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டாம் என்று, நான் கேட்டுக்கொள்கிறேன். கோவிட்-19 தொற்று இல்லாத மாநிலமாக கோவா இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கேயே பாதுகாப்பாக இருக்கலாம்" என்றார்.
கோவா கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுந்த இடைவெளி பின்பற்றப்பட்டு, தற்போது மாநிலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
கோவா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கா கூறுகையில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இங்கிருக்க விரும்பவில்லை. நம் மாநிலத்திற்கு எத்தனை தொழிலாளர்கள் தேவை என்பதைக் கண்டறிய இதுவே சரியான நேரம். நம் மாநிலத்திலேயே நிறையே இளைஞர்கள் உள்ளனர். எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தைவிட்டுச் செல்வதால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றே நான் கருதுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி