கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் ஒரு கோடியே 32 லட்சத்து 29 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கொடிய வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 76 லட்சத்து 91 ஆயிரத்து 422 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கரோனா பரிசோதனை மையம் கூறுகையில், " மாஸ்கோவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கரோனா வைரஸ் தொற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்" எனத் தெரிவித்தது.
ரஷ்யாவில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் 34 லட்சத்து 79 ஆயிரத்து 330 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டைப் பொறுத்தவரை அந்நாட்டில் 18 லட்சத்து 87 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 921 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:முதன்முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... காரணம் என்ன?