காதல் என்ற சொல் காதில் ஒலித்தாலே, மூளையிலுள்ள ஹார்மோன்கள் சிலிர்த்தெழும். ஆதி மனிதன் உண்டான நாள் முதல் அவனுடன் தோன்றி பல மனங்கள் மாறி மாறி பயணம் செய்து இன்றளவும் ஒவ்வொருவரையும் கட்டிப்போடும் மந்திரச் சொல்லாக நிற்கிறது ‘காதல்’. காதல் என்றால் என்ன? அது எப்படி வரும்? எதற்கு வருகிறது? ஏன் வருகிறது போன்ற லட்சக்கணக்கான கேள்விகள் அனைவரின் மனதிற்குள்ளும் எழும். உலகப் படங்களும் இதுதான் காதல், அதுதான் காதல் என்று சற்று வித்தியாசமான பார்வையில் பல பரிமாணங்களை முன்வைக்கின்றன.
அவையனைத்திற்கும் பதில்களைத் தேட வேண்டியதில்லை. ஏனெனில், காதலை வரையறுக்கவும் முடியாது, அதனை எந்த வரையறைக்குள்ளும் அடக்கவும் முடியாது. ஒரு ஆணின் மனதுக்குள்ளும் பெண்ணின் மனதுக்குள்ளும் ஓடும் மாயநதி காதல். காதல் இரு மனங்கள் பேசிக்கொள்ளும் மௌன மொழி. அந்தக் காதல் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை, இந்தச் சாதியா என்று பார்த்துவிட்டு வருவதில்லை, எந்த மதம் என்று கேட்டுவிட்டு வருவதில்லை. பாகுபாடு பார்க்காமல் ஒருவரைப் பார்த்தவுடன் மனதுக்குள் குடிகொள்வதும் காதல்.
இதுவரை காதலை தீர்க்கமாக வரையறுக்க முடியவில்லை என்றாலும், உலகில் எங்கோ வாழும் ஒரு உயிர் மீது சக உயிர் காட்டும் அன்பு, பரிவு, பாசம், அந்த உயிருக்காகச் செய்யும் தியாகம் இவையனைத்தும் காதல் குறித்த புரிதலை நமக்கு உணர்த்துகின்றன. அப்படியோர் நெகிழ்ச்சியான நிகழ்வுதான் கேரள மாநிலம் திருச்சூரில் நடந்துள்ளது.
திருச்சூர் அருகே ஆளூர் மனப்பரம்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரனவ். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்புவரை அடங்காத காளையாக ஊருக்குள் சுற்றித்திரிந்தவர். அப்படி இருந்தவருக்கு கிராம மக்கள் செல்லமாக வைத்த பெயர் ‘டுட்டுமோன்’.
ஜாலியாக சுற்றித்திரிந்த டுட்டுமோன் யாரும் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கினார். அவ்விபத்தில் இடுப்புக்கு கீழே அவரின் உடல் பாகங்கள் செயலற்றுப் போனது. பூமி தாங்கிக் கொண்டிருந்த அவரையும், அவரது கால்களையும் அன்றிலிருது வீல் சேர் தாங்க ஆரம்பித்தது.
விபத்தில் அவர் கால்கள் முடங்கினாலும், மன உறுதி முடங்கவில்லை. முக்கியமாக அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரை ஓரிடத்தில் அடைந்து கிடக்கவிடாமல், எப்போதும் அவரை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ள பெரும் சிரத்தை எடுத்தனர்.
சும்மா வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது என்பதற்காக, கால்கள் போனால் என்ன கைகள் இருக்கிறதே என்று அவர் தன்னை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை படு பிஸியாக்கிக் கொண்டார். அதன் விளைவு கேரளாவிலுள்ள பிரதான கட்சியின் ஐடி விங்கில் வேலை. வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டே கைமேல் காசும் பார்க்கிறார்.
எப்போதும் குதூகலமாக பேஸ்புக்கில் வீடியோக்கள், மீம்ஸ்கள் பதிவேற்றும் பிரனவ் பல ஊர்களில் நடக்கும் கோயில்களுக்குச் சென்று அங்கு நடக்கும் திருவிழாக்களில் கலந்துகொண்டு அதனை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றிவந்துள்ளார்.
வீல் சேரில் அமர்ந்து திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடிய பிரனவ்வின் ஒரு வீடியோ பேஸ்புக்கில் செம வைரலானது. அந்த வீடியோவை பார்த்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சகானா என்ற பெண் மெய்சிலிருத்துவிட்டார். அதுமட்டுமின்றி பார்த்தவுடன் அவருக்கு பிரனவ்வை பிடித்தும் போய்விட்டது. நேராக பிரனவ்வின் இன்பாக்ஸ் கதவை தட்டி அவரின் ஃபோன் நம்பரை வாங்கியுள்ளார்.
தினமும் இருவரும் ஃபோனில் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பிரனவ்விடம் பேச பேச அவரை சகானாவுக்கு மேலும் பிடித்துப்போய் அவருக்குள் உருவான காதலை பிரனவ்விடம் கூறினார். காதலை கூறிய கையோடு அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார்.
சகானாவை பிரனவ்க்கும் பிடித்திருந்தாலும், தனது கால்களை நினைத்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை தடுத்தன. இதனால் மறைமுகமாக பல வழிகளில் சகானாவின் கல்யாண ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். ஆனால் சகானாவோ “வாழ்ந்தால் உன்னோடு... இல்லையேல் மண்ணோடு” என்ற வரிகளுக்கேற்ப விடாப்பிடியாக பிரனவ்வை துரத்தியிருக்கிறார்.
சகானாவின் காதல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் ஆசையைக் கைவிடுமாறு கூறியுள்ளனர். சகானாவின் செயல்கள் பிரனவ் வீட்டாருக்கும் கொஞ்சம் தர்மசங்கடமான நிலையைத்தான் ஏற்படுத்தியது. எதற்கும் சளைக்காத அவர், முழுமூச்சாக இறங்கி சகானா ஒருநாள் பிரனவ் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அப்போது பிரனவ்வும், அவரது குடும்பத்தாரும் பிரனவ்வின் நிலையை எடுத்துக்கூறி திருமண விருப்பத்தை கைவிடுமாறு சகானாவிடம் கேட்டுள்ளனர். ஆனால், அதை எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாத அவர் உள்ளத்தில் எழுந்த காதலுக்கு பாகுபாடில்லை எனவும், தனக்கு பிரனவ்வின் உள்ளத்தை பிடித்திருக்கிறது அவரது கால்கள் எனக்கொரு பொருட்டில்லை என்றும் கூறியிருக்கிறார்.
எப்படியாவது சகானாவின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்த அவர்களின் ஆசை நிராசையானது. “திருமணம் என்றால் இவருடன்தான்” என்ற சகானாவின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டு இருவீட்டாரும் திருமணத்துக்கு ஏகமனதாகச் சம்மதித்தனர். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது சகானாவின் கால்கள் மட்டுமல்ல; பிரனவ்வின் ‘கால்’களும்தான்! அதன்படி நேற்று கொடுங்கலூர் கோயிலில் மக்களின் மனங்கள் வாழ்த்த, மங்கல வாத்தியங்கள் முழங்க சகானாவின் கழுத்தில், பிரனவ்வின் கைகளால் தாலி ஏறியது. இனி தாஜ்மஹால் மட்டுமல்ல இந்த நாட்டில் சகானாவும் காதலின் சின்னம்தான்.
டுட்டுமோன்-சகானாவின் திருமண வீடியோ டிக்டாக், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ”காதலுக்கு உடல் மட்டும் முக்கியமில்லை, மனம்தான் முக்கியம் என்பதை நிரூபித்துக் காட்டிய இருவருக்கும் வாழ்த்துகள்” என்று கூறி சமூக வலைதளவாசிகள் காதல் ஜோடியை வாழ்த்து மழையில் நனையவைத்துவருகின்றனர்.