'அரசியல் என்பது சாத்தியமாக அடையக்கூடிய இலக்குகளை செய்துகாட்டுவது' என்றார் மாமன்னரான பிஸ்மார்க். இயற்பியலைவிட அரசியல் கடினமானது என்றார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
காந்தியின் வருகைக்கு முன் அரசியல் என்பது வெற்றிக்கான போர்க்களம் என்றே பார்க்கப்பட்டது. காந்தி தனது வாழ்க்கையில் அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், குடும்பம் ஆகிய அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகினார். காந்தியைப் பொறுத்துவரை அனைத்திலும் நேர்மை அடிப்படையான அம்சம் என்ற கருத்தை முன்வைத்தார்.
காந்தியின் வாழ்க்கையானது அவர் வாழும் காலகட்டத்திலேயே பலரையும் வியக்க வைத்துள்ளது. காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை ஜோசப் கே. டோக்கே என்பவர் 1909ஆம் ஆண்டே எழுதி வெளியிட்டார். அதேபோல் ரோமெய்ன் ரோலாந்த் என்ற பிரெஞ்சு நாடக ஆசிரியர் 'காந்தி என்ற உலகத்து குடிமகன்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். எரிக் ஹெச். எரிக்சன் என்ற உளவியல் நிபுணர் காந்தியின் அகிம்சை சத்தியாகிரகப் போராட்டம் என்ற புதிய பாதை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
பன்னாலால் தாஸ்குப்தா என்ற மார்க்சிய ஆய்வாளர் புரட்சியாளர் காந்தி என்ற பெயரில் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் வரிசையில் காந்தி செய்த சமூகப் புரட்சியை எடுத்துரைத்தார்.
அத்துடன் ஆஷிஷ் நந்தி உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் காந்தியின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளனர். அவர்கள் சத்தியம் என்ற கோணத்திலேயே காந்தியை அணுகினர். காரணம் தனது வாழ்நாள் முழுவதும் கடவுளையும் சத்தியத்தையும் சமமாகப் பாவித்தவர் காந்தி. தனது ஆரம்ப காலகட்டத்தில் கடவுளை சத்தியம் என்று பாவித்த காந்தி, பின்னர் சத்தியம்தான் கடவுள் என்றார்.
காந்தி சத்தியத்தை தன்னளவிலும் சமூக அளவிலும் கடைப்பிடிக்க விரும்பினார். அதே வேலையில் தனது பார்வைதான் சரி என்று காந்தி முரண்டு பிடிக்கவில்லை. சத்தியமும் கடவுளும் ஒன்றுதான் என்றாலும் அதை அடையப் பல வழிகள் உண்டு என்றார்.
அரிச்சந்திர நாடகத்தின் மூலம் உண்மை மட்டுமே பேச வேண்டும் என்று மனம் மாறிய காந்தி, நேர்மைதான் கடவுளை சென்றடையும் வழி என்று நம்பி வாழ்ந்தும் காட்டினார்.