காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழாவையும், 70ஆவது நினைவுநாள் விழாவையும் கொண்டாட அனைவரும் தயாராகிவருகின்றனர். இந்நிலையில் மரணம் குறித்து காந்தியின் பார்வையை நாம் பார்க்கலாம்.
காந்தி தனது வாழ்நாளில் மரணம் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வந்தார் இது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. தனது ஆரம்பக்கட்ட அரசியல் வாழ்க்கையிலிருந்தே காந்தி மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை. இதன் காரணமாகவே, தான் எடுத்த முடிவில் அச்சமின்றி செயல்படும் உறுதியைப் பெற்றிருந்தார் காந்தி.
தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரக வாழ்க்கை குறித்த புத்தகம் ஒன்றில் காந்தி, மனிதன் இயற்கையின் அனைத்து செயல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். பிறப்பை எப்படி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளாகிறோமே இறப்பையும் அதே மனநிலையில் ஏற்க வேண்டும் என்கிறார்.
இதையும் படிங்க: காந்தி 150: சத்தியத்தில் கடவுளைக் கண்ட காந்தி
1926ஆம் ஆண்டு காலகட்டத்தில் தனது 'யங் இந்தியா' இதழில் மரணம் ஒரு உற்ற தோழன் என்றும் சிறந்த துணை என்றும் காந்தி குறிப்பிடுகிறார். உண்மையுடன் உலகத்தை எதிர்கொள்பவனுக்கு மரணம் ஒரு நல்ல நிகழ்வுதான் என்று தெரிவிக்கிறார் காந்தி.
இதன் காரணமாகவே, உண்மைக்காக தன்னை அர்ப்பணிக்க, தனது வாழ்நாள் முழுவதும் தயாராக இருந்தார் காந்தி. 1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பே காந்தியைக் கொல்ல பல முறை சதிச்செயல்கள் நடைபெற்றுள்ளன. இருப்பினும் தனிப்பட்ட முறையில் தனக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்த்து வந்தார் காந்தி.
125 ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்த காந்தி, மரணத்திற்கு அஞ்சி தனது முடிவை ஒருபோதும் மாற்றிக்கொண்டதில்லை. 1946 ஆண்டு ஹரிஜன யாத்திரையின் போதும் சரி, 1947ஆம் ஆண்டு நவகாளி யாத்திரையின் போதும் சரி கலவரங்களைக் கண்டு அஞ்சாமல் தனியே முன் சென்றவர் காந்தி.
வாழ்வையும் மரணத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்த காரணத்தால்தான் காந்தி மகாத்மாவாக மதிக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: காந்தியின் முழுமைபெற்ற கல்விக் கொள்கை - இன்றைய காலத்தின் தேவையா?