நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் மகாத்மா காந்தியை முதன் முதலில் "இந்தியத் திருநாட்டின் தந்தை" என்று அழைத்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுபாஷ் சந்திரபோஸுக்குப் பின்னரே, காந்தியை "தேச தந்தை" என்று சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
பொதுவாக, ஒரு நாடு சுதந்திரம் அடையும்போது, பதவியேற்கும் முதல் குடியரசுத் தலைவருக்கே இதுபோன்ற பட்டங்கள் வழங்கப்படும். ஆனால், காந்தியோ இதுபோன்ற எந்த ஒரு பதவியிலும் இருக்கவில்லை. அதற்காக அவர் முயலவும் இல்லை. காந்தியை "தேசத்தின் தந்தை" என நேதாஜி அழைப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா என்ற தேசத்தைக் கட்டமைப்பதில், காந்தி எவ்வளவு முக்கிய பங்காற்றினார் என்பதை நேதாஜி கண்கூடாகக் கண்டார். அதனாலேயே காந்தியை "தேசத்தின் தந்தை" என்று நேதாஜி அழைத்தார்.
ஒரு நாடு என்பது அதன் புவியியல் மற்றும் அரசியல் எல்லைகளால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. தேசம் என்பது ஒற்றுமை உணர்வினால் கட்டமைக்கப்பட்டது தவிர, அதன் பழம்பெரும் வரலாறுகளால் இல்லை. சில நாடுகளில் இந்த ஒற்றுமை உணர்வு என்பது அந்நாட்டில் இருக்கும் பொதுவான மொழி காரணமாக அமையும்; சில நாடுகளில் இந்த உணர்வு நாடு முழுவதும் இருக்கும் பொதுவான மதம் காரணமாக அமையும். பங்களாதேஷ் இந்த உணர்வை பொதுவான மொழி காரணமாக அடைந்தது, பாகிஸ்தான் பொதுவான மதத்தின் காரணமாக இந்த உணர்வை அடைந்ததுள்ளது.
இந்தியர்களின் தேசியவாத உணர்வு, ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்கிற பொதுவான விடுதலை வேட்கையில் கட்டப்பட்டுள்ளது. தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய முதல் தலைவரல்ல காந்தி, அவருக்கு முன்னரே பல தலைவர்கள் இந்தியாவின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பின் எதற்காகக் காந்தியை "தேசத்தின் தந்தை" என அழைக்கிறோம் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதுதான் இயற்கையும் கூட!
இந்தியா போன்ற பரந்த தேசத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களிடையே தேசிய உணர்வையும், ஒற்றுமை உணர்வையும் உருவாக்கியதாலே காந்தி தனித்துவமாகத் தெரிந்தார். இந்த தேசத்தில் வாழும் கடைக்கோடி குடிமகனிடமும் ஒரு பிணைப்பைப் பெற்றிருந்ததாலே, இதை மகாத்மா காந்தியால் செய்ய முடிந்தது.
ஒருமுறை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் காந்தியிடம் அவரது பெயர், முகவரி, தொழில்கள் குறித்துக் கேட்டபோது, எள்ளளவும் யோசிக்காமல், ‘தான் ஒரு சாதாரண விவசாயி, நெசவாளன்’ என்று கூறினார். அவ்வாறு கூறியதன் மூலமே, நாட்டிலுள்ள பலகோடி உழைக்கும் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் உடனடி பிணைப்பை அவரால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. மேலும் ஆடம்பரங்களைத் துறந்து கடைசிவரை அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையே மக்களுடன் இத்தகைய பலமான ஒரு பிணைப்பை இறுதிவரை அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது.
பெரிய நில பிரபுத்துவ குடும்பங்களிலிருந்து வந்த மற்ற தலைவர்களைப் போல நகர்ப்புற வாழ்க்கையை வாழாமல், காந்தி கதர் ஆடையையே இறுதிவரை உடுத்தினார். கதர் ராட்டையைச் சுற்றினார், விவசாயிகளுடன் பழகினார், தனது ஆசிரமங்களிலுள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்தார். இதுபோல் எளிய மனிதர்களுடன் அவர் எப்போதுமே தொடர்பிலிருந்தார். காந்தியின் மற்றொரு பலம், மக்களைத் தொடர்புகொள்ள அவர் பயன்படுத்திய மொழி. மற்ற தலைவர்களைப் போல ஆங்கிலத்திலோ, சமஸ்கிருதம் கலந்த இந்தியிலோ பேசாமல், அனைவருக்கும் புரியும்படியான எளிய இந்தி அல்லது குஜராத்தி மொழிகளையே பயன்படுத்தினார்.
காந்தி மற்ற அரசியல் தலைவர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களை தங்கள் தாய்மொழியிலேயே பேசும்படி வற்புறுத்துவார். ஒரு முறை குஜராத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், அதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே பேசிவந்த முகமது அலி ஜின்னாவை அவரது தாய்மொழியான குஜராத்தியிலேயே பேசவைத்தார். இதுபோலத்தான் சுரேந்திரநாத் பானர்ஜியை வங்காளத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவரது தாய் மொழியான வங்காளத்தில் பேச வைத்தார். மகாத்மா காந்தி ஒன்றும் சிறந்த மேடைப்பேச்சாளர் இல்லை. ஆனால் தேசத்தின் கடைக்கோடியிலுள்ள பாமர மனிதனும் புரிந்துகொள்ளும் வகையிலேயே அவரது பேச்சுகள் அமைந்திருந்தன.
நாடு முழுவதும் தேசியவாத உணர்வைக் காந்தியால் பரப்ப முடிந்ததற்கு மற்றொரு காரணம், சத்தியாகிரக இயக்கத்தில் பெண்களையும் ஈடுபடுத்துவதில் அவர் காட்டிய முனைப்பு ஆகும். காந்தியின் தொடர் முயற்சியினாலேயே உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று சிறைக்குச் சென்றனர்.
மேலும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமிடையே ஒற்றுமை ஏற்படுத்த காந்தி அயராது உழைத்தார். இதுவே ஜனவரி 30, 1948இல் ஒரு இந்து அடிப்படைவாதியால் அவர் படுகொலை செய்ய முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்துக்களிடையே நிலவிய தீண்டாமையை ஒழிப்பதிலும் அவர் அரும்பாடுபட்டார். இதற்காகவே காந்தி ஹரிஜன சேவா சங்கத்தை உருவாக்கினார். மேலும் காலங்காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே செய்துவந்த வேலைகளை, பிற சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரது அனைத்து நடவடிக்கைகளும் பல தரப்பட்ட மக்களை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. மதம், சாதி, மொழி மற்றும் பாலின வேறுபாட்டால் பிரிந்து கிடக்கும் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க 1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி திட்டமிட்டுச் செயல்பட்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் நேரடியாகத் தீவிர சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்காமல், நாடு முழுவதும் காந்தி ஓராண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாட்டிலுள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ளப் பொதுமக்களையும், உள்ளூர் தலைவர்களையும் சந்தித்தார். சுற்றுப்பயணத்துக்குப் பின் காந்தி அகமதாபாத் அருகே தனது சபர்மதி ஆசிரமத்தை அமைத்தார்.
அவர் ஆசிரமங்களில் கடைப்பிடிக்கப் பிரம்மச்சரியத்தை அடிப்படையாகக் கொண்டு 11 விதிகளை உருவாக்கினார். தனது சொந்த வாழ்க்கையில் அவர் அறிந்துகொண்டதையே மக்களிடம் அவர் எடுத்துரைத்தார். இதுவே காந்தியை மற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து வேறுபடுத்தி, அவரை ஒரு மகாத்மாவாகவும், "தேசத்தின் தந்தை"யாகவும் உருவாக்கியது.