உலக நாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பே சர்வதேச அமைதியை உறுதிப்படுத்துகிறது. உலக நாடுகள் போரைத் தவிர்த்து பொறுப்புணர்வுடன் செயல்பட அகிம்சை வழியே சிறந்ததாகக் கருதப்படுகிறது. சர்வதேச எல்லைச் சிக்கல், மத ரீதியிலான அடிப்படைவாதம், நதிநீர் பிரச்னை உள்ளிட்டவைகளால் உலகம் தொடர்ச்சியான சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. உலகளவிலான இந்தச் சிக்கல்களுக்கு காந்தியின் கொள்கைகளே சரியான தீர்வைத் தரும்.
ஆனால், இது போன்றவற்றைத் தீர்க்க காந்திய வழி சரியான தீர்வைத் தராது என உலக நாடுகள் பல கருதுகின்றன. சமூக கலாசார சிக்கல்களுக்கே காந்திய வழி தீர்வைத் தரும் என்ற எண்ணம் உள்ளது. உலகளாவிய அரசியல் சிக்கல்களில் காந்தி காட்டும் அமைதிப் பாதை சிறப்பான வழிகாட்டுதலாகத் திகழும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
'நமக்குள்ளான சிக்கல்களைத் தீர்க்க சகிப்புத்தன்மை என்பது பெரிதும் அவசியம். இல்லையெனில் மூன்றாம் நபரின் தலையீடு என்பதை தவிர்க்க இயலாது' என்கிறார் காந்தி.
சமூக, மத, அரசியல் சார்ந்த விஷயங்களில் சமாதானம் மிகவும் அவசியம் என்பதை உறுதியாக நம்பிய காந்தி சகிப்புத்தன்மை வீழும்போது அமைதி சீர்குலைந்துவிடும் என எச்சரிக்கிறார். நன்கு முதிர்ச்சிபெற்ற சமூகத்திலேயே உள்நாட்டுக் கலகங்கள், அண்டை நாடுகளுக்கிடையேயான சண்டைகள் எனப் பொறுப்பற்ற செயல்களால் அந்தப் பகுதிகளில் உள்ள அமைதி சீர்குலைக்கப்படுகிறது. ஆயுதப்போராட்டத்தால் அமைதி என்றும் உருவாகாது. துரதிர்ஷ்டவசமாக ஒருசில நாடுகளே சிக்கல்களை அகிம்சை வழியில் தீர்க்க முன்வருகின்றன. பெரும்பான்மையான நாடுகள் அழிவின் சக்திகளிடம் அடைக்கலம்புகுந்து அமைதியை சீர்குலைத்துக் கொள்கின்றன.
சலசலப்புகள் நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில், காந்தியின் அகிம்சை வழியானது சாத்தியமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பெரும்பாலானோரின் பதிலாகக் கிடைக்கும். ஆனால், தன்னைச் சூழ்ந்துள்ள சிக்கல்களை காந்தியின் அகிம்சை வழியில் போராடி நீண்டகாலத் தீர்வைக்கண்ட பல தலைவர்களையும் உலகம் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டுதான் வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, வங்கதேசத்தின் வங்கித் தந்தை முகமது யூனுஸ், கென்யாவின் சூழலியல் போராளி வாங்கரி மாத்தாய், ஃபின்லாந்தின் சமாதானத் தூதுவர் மர்ட்டி அதிசாரி, ஈரானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஷெரின் எபாடி என பல்வேறு ஆளுமைகளை காந்தியக் கொள்கை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. அமைதியை நிலைநாட்ட காந்தியின் கொள்கைக்கு உலகளவில் இன்றும் இடமிருக்கத்தான் செய்கிறது.