'லெட்ஸ் எண்டோர்ஸ் டெவலப்மென்ட்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஸ்வாலம்பன் மின்-உச்சி மாநாடு 2020-ல் கலந்துகொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,
“குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) ஏற்றுமதியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 48 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக அரசாங்கம் அதிகரிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு எம்எஸ்எம்இ துறை பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் 30 விழுக்காடு வருமானம் எம்எஸ்எம்இ-யிலிருந்து வருகிறது.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 48 விழுக்காடு எம்எஸ்எம்இ-ஐச் சேர்ந்தவை. இன்று வரை 11 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில், உற்பத்தியினை குறைந்தபட்சம் 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாகவும், ஏற்றுமதி விழுக்காட்டினை 48-லிருந்து 60 விழுக்காடாகவும், ஐந்து கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
எம்எஸ்எம்இ- அமைச்சகத்தின் நன்மைகளைப் பெற பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனத் துறையின் கீழ் தங்களை பதிவு செய்ய வேண்டும். சிறு வணிகர்களை உள்ளடக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதுபோன்றவர்களை பதிவு செய்ய ஊக்குவிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி அரசுக்குத் தேவை.
வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு மாற்றினை தற்போது சிந்திக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அந்நிய முதலீட்டைக் கொண்டு வர வேண்டும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். இந்தியாவை சிறந்த பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும்.
கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் செயல்பட்டுவருகிறது. அவர்கள் தன்னம்பிக்கை கொள்ளும் வழிகளை அரசு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.