புதுச்சேரி மாநிலத்திற்கு துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்று இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகை இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்து அவர் வாட்ஸ்-அப் வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், “கடந்த நான்கு ஆண்டுகளில் ஆளுநர் மாளிகை அரசு அலுவலர்கள், பொது மக்களுடன் ஒன்றிணைந்து அனைத்து பிராந்தியங்களிலும் பணியாற்றியுள்ளது.
ஐந்தாண்டு தொடக்கத்தைப் புதிய வழியில் மக்கள் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இணைய வழி தொடர்பு காணொளி காட்சி என, மத்திய அரசின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகிறது. வெளிமாநில கல்வி நிறுவனங்கள், பெண்கள் குழுக்கள் நிர்வாக மேலாண்மை குழுவினருடன் ஆளுநர் மாளிகை தொடர்பிலிருந்து, புதுவைக்குத் தேவையானவற்றை வழங்கிவருகிறது.
ஆளுநர் மாளிகை விழாக்கள் அனைத்தும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்திலும், ஆளுநர் மாளிகையை மக்கள் எளிதாக அணுகும் விதமாக, போன் கால்கள், வாட்ஸ்-அப், மின்னஞ்சல் மூலம் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில், இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை உடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கியதற்கு, ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.