புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக, முதலியார்பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள் காவல்துறையினரை கண்டதும், இருசக்கர வாகனங்களில் தப்பிக்க முயன்றனர். உடனே அவர்களை மடக்கிப் பிடித்து, காவல்துறையினர் விசாரிக்கையில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், புதுச்சேரி-கடலூர் சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு கடை உரிமையாளர், இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
உடனே அங்குச் சென்ற காவல்துறையினர், இதுதொடர்பாக புதுச்சேரி தேங்காய்த்திட்டுப் பகுதியைச் சேர்ந்த வினோத், லூர்துசாமி, தேனி பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன், விஜய் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் நான்கு பேரிடமும் இருந்து ரூ.2 .5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது!