உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்ஜீத் சிங் பாட்டியா என்பவர், மாநில கால்நடைத் துறையில் தனக்கு டெண்டர் எடுத்துத் தருவதாகக் கூறி தன்னிடம் சிலர் ரூ.9.72 கோடி மோசடி செய்ததாகக் காவல் துறையின் சிறப்புப் பிரிவினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஹஸ்ரத்கஞ்ச் காவல் துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
விசாரணையில், மாநில கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை இணையமைச்சரின் தனிப்பட்ட தலைமைச் செயலர் ராஜ்நிஷ் திக்சித், தனிப்பட்ட செயலர் தீரஜ் குமார், செய்தியாளர் ஏ.கே. ராஜிவ் என்ற அகிலேஷ் குமார், ஆஷிஷ் ராய் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நால்வரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "ராஜ்நிஷ் திக்சித், அவருடைய கூட்டாளி ஆஷிஷ் ராய், தீரஜ் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறோம். இந்த மூவரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஏ.கே. ராஜிவை கைதுசெய்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.
இந்த நபர்களிடமிருந்து ரூ.28.32 லட்சம், எஸ்.கே. மிட்டல் என்ற பெயர்கொண்ட கால்நடைத் துறை துணை இயக்குநர் அடையாள அட்டை, கோவிட்-19 பாஸ், ஆதார் அட்டை, ஆறு செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின்போது, ஆஷிஷ் ராய் தனது கூட்டாளிகளுடன் வித்யான் சபா செயலகத்திலிருந்து செயல்பட்டதாகவும், கால்நடைத் துறை துணை இயக்குநராகத் தான் நாடகமாடி மன்ஜீத் சிங்கிடம் மோசடி செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க : ஏஜிஆர் வரையறையில் அவசர மாற்றம் தேவை!