ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகப் பணியாற்றி வந்த ஜி.சி.முர்மு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கையாளராக (CAG) கிரிஷ் சந்திர முர்மு நேற்று முன்தினம் (ஆக.6) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (ஆக. 8) அவர் தலைமை கணக்குத் தணிக்கையாளராக (CAG) பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிஏஜியாக ஆறு ஆண்டுகளோ அல்லது 65 வயதை அடையும் வரையிலுமோ முர்மு பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அப்பதவியில் இருந்த ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராகவும், அமித்ஷா உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஐஏஎஸ் அலுவலர்களில் ஒருவர் முர்மு ஆவார். பிரதமராக மோடி பதவியேற்றப் பின் மத்தியப் பணிக்கு அழைக்கப்பட்ட முர்மு, மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரி்க்கப்பட்டபோது அதன் முதல் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து!