உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில், கரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தை நாடுகள் கையாண்ட விதம் தொடர்பாக, எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த வரிசையில், இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, கரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாண்ட விதம் அவ்வவ்போது எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை மிக மோசமாக மத்திய அரசு கையாண்டுள்ளது என்றும், அது தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேபி ஃபேபியன் உள்பட முன்னாள் அரசு அலுவலர்கள் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வாயிலாக, இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவில், நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகின்றது. இந்நெருக்கடியை மத்திய அரசு மிக மோசமாகக் கையாண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியால், நாட்டு குடிமக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள, ஏற்படவிருக்கும் மோசமான தாக்கம் குறித்து, சுதந்திரமாக விசாரணை நடத்த விசாரணை ஆணைய சட்டம் பிரிவு 3ன் கீழ் ஆணையத்தை அமைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில், மருத்துவ அறிவியல், தொற்று நோயியல், பொது சுகாதாரம், சட்டம், சமூக அறிவியல் உள்பட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கி ஆணையம் செயல்பட வேண்டும். எவ்வித முன்னறிவிப்பு இன்றி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், நாட்டு குடிமக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள, ஏற்படவிருக்கும் மோசமான தாக்கம் தொடர்பாக, இவ்வாணையம் முக்கியத்துவம் அளித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.
இம்மனு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் நெருக்கடி பரவலைக் கட்டுப்படுத்திவரும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஏற்கனவே பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.