பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் வன்முறைகள், கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் ஆகிய சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப்பைச் சேர்ந்த ஜக்ஜித் கவுர் (17) என்ற சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இதனிடையே, சமூக வலைதளங்களில் அந்த சிறுமி இஸ்லாம் மதத்திற்கு மாறுவது போன்றும், இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்வது போன்றும், வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், அவர் "இஸ்லாம் மதத்திற்கு நான் மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை", என தெரிவித்திருந்தார்.
ஆனால், சிறுமியின் சகோதரர் சுரேந்தர் சிங், தன் சகோதரி கட்டாயத்தின் பேரில் மதமாறியுள்ளதாகவும், கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், காவல்துறை சார்பில் சிறுமி வீடு திரும்பிவிட்டதாகவும், இது சம்பந்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை மறுத்த சிறுமியின் சகோதரர், தன் சகோதரி இன்று வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.