புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவு கூடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர். இதனால் கரோனா தொற்று அதிகமாகப் பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனைத் தடுக்கும் விதமாக காய்கறி அங்காடிகள் புதிய பேருந்து நிலையம், லாஸ்பேட்டை, மடுவுபெட் பகுதிகளில் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலை குறித்தும், அங்கு மக்கள் சமூக இடைவெளியை விட்டு நின்று பொருள்களை வாங்குகின்றார்களா என்பது பற்றியும் முதலமைச்சர் நாரயணசாமி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா ஆகியோர் அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.
பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், வியாபாரிகள் இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காய்கறிகளின் விலையை உயர்த்தி விற்கக் கூடாது என்றும், மக்கள் கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வெறும் ஒலி, ஒளி அறிவியல் பூர்வமானது அல்ல - கி. வீரமணி