திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இடுக்கியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா, “15 ஆம்புலன்ஸ்களில் நடமாடும் (மொபைல்) மருத்துவக் குழுவினர் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்றார்.
கேரளத்தின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீலகிரியில் நிலச்சரிவு: பொதுமக்கள் வெளியேற்றம்!