முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிராத்திய சிந்தியா பாஜகவில் சேர்ந்தது முதல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவிவருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், மத்தியப் பிரதேச சட்டப்பேரவையை வரும் மார்ச் 26ஆம் தேதிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
முன்னதாக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது முறையாக இருக்காது என்றும், சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு உரிமையில்லை என்றும், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளான் அமைச்சர் நரேந்திர தோமர், "எதிர்க்கட்சியினரும், ஆளுநரும் மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலிறுத்துகின்றனர். இருப்பினும், கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைக் கண்டு பயம் கொள்வதே அவர்கள் பெரும்பான்மையை இழந்துவிட்டதைக் காட்டுகிறது" என்றார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க தேவையான இடங்கள் பாஜகவுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழக்குகளுக்கு இவ்வளவு கோடியா? - பாதுகாப்பு துறையின் ரிப்போர்ட்!