குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம், கடந்த இரு நாட்களாக கலவரமாக மாறியுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு டெல்லிப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெடித்துள்ள இக்கலவரத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சமூக ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் டெல்லி கலவரத்தை எதிர்த்து நேற்று இரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நகரின் டோலி சவுக், சவன் டேம்ஸ் சாலை, கிங் கோட்டி, யாகுட்பூரா ஆகிய பகுதிகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு பெண்கள் உட்பட ஏராளாமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய டெல்லி காவல் துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பாதைகைகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அன்ஜனி குமார், மக்கள் அமைதியாகவும் ஒன்றுமையுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி கலவரம் : மோடி, மத்திய பாதுகாப்பு குழுவுடன் அஜித் தோவால் இன்று ஆலோசனை!