புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் பகுதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு திருட்டு வழக்கு தொடர்பாக, நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த செல்வம்(எ) செல்லதுரை(65) உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
அதில் முன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செல்லதுரை தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 1991ஆம் ஆண்டு செல்லதுரையை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடிவந்தனர்.
இச்சூழலில் நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகர் பகுதியில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், நேற்று முன்தினம் (செப்.3) காவல் ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆய்வாளார் பெருமாள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், அப்பகுதிக்குச் சென்று செல்லதுரையை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாள நிஹாரிகா பட், காரைக்கால் மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு நீண்ட காலமாக தேடப்படும் நிலையில் உள்ள பல்வேறு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 10 நாள்களில் மட்டும் மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஐந்து தேடப்படும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வருமானம் இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது