இந்திய ரயில்வே அமைச்சகம் தனியார் துறை உதவியுடன் 151 நவீன ரயில்களை, 109 வழித்தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியுள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 30,000 கோடி ரூபாய் தனியார் துறை முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து இந்திய ரயில்வே அமைச்சக அலுவலர் கூறுகையில், ”2023 ஏப்ரல் முதல், தனியார் ரயில் போக்குவரத்தை துவக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால், ரயில்வே தனியார்மயமாக்கப்படுவதாக கருத வேண்டாம். 2,800 ரயில் சேவையில், 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும். மேலும் இத்திட்டத்தின்படி தனியார் ரயில்கள் இந்தியாவில் மட்டுமே தயார் செய்யப்படவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
விமானம், சொகுசு பஸ் கட்டணங்களின் அடிப்படையில், தனியார் ரயில் கட்டணமும் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும். ரயில் தடம், ரயில் நிலையங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்த, தனியாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம் தனியார் ரயிலில் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும். ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும், தவறினால் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.
அதன்படி தனியார் ரயில்களுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022-23ஆம் ஆண்டில் 12 ரயில்களும், 2023-2024 ஆண்டில் 45 ரயில்களும், 2025-26 ஆண்டில் 50 ரயில்களையம் அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் 2026-27 ஆம் நிதி ஆண்டிற்குள் தனியார் ராயில்களின் மொத்த எண்ணிக்கையை 151 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.