இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்றைக் குறைக்கப் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், லடாக் பகுதியிலுள்ள ராணுவ வீரர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் பகுதியைச் சேர்ந்த 34 வயது மதிக்கதக்க ராணுவ வீரரின் தந்தை கடந்த மாதம் ஈரானுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியா திரும்பியுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட சோதனையில், மார்ச் 6ஆம் தேதி அவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது மகனான ராணுவ வீரரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 16ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், அவருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த ராணுவ வீரர், தனது தந்தையை கவனித்துக்கொள்ள பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை விடுப்பில் இருந்துவிட்டு மார்ச் 2ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். தந்தைக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மார்ச் 7ஆம் தேதி முதல் ராணுவ வீரரும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, ராணுவ வீரரின் மனைவி, குழந்தை மற்றும் சகோதரி ஆகியோரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு காண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இத்தாலியிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா