புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள ஒதியம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலையில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சாலையில் மாத்திரைகளை உலர்த்தும் டிரையர் இயந்திரதில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே தப்பி ஓடினர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டிரையர் எந்திர பகுதியில் பணியாற்றிய 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்ட தீயணைப்பு துறையினர், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவை மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், தீவிபத்து குறித்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.