உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலை புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் (forbes) இதழ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா, எச்சிஎல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 10ஆவது முறையாக, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 17ஆவது பட்டியலில் 30 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தையும், ஐரோப்பிய ரிசர்வ் வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே இரண்டாவது இடத்தையும், நிர்மலா சீதாராமன் 41ஆவது இடத்தையும், ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 55ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். கிரண் மஜும்தார்-ஷா 68ஆவது இடத்தை பிடித்துள்ளார்.