புதுச்சேரி கிருமாம்பாக்கம் தண்ணீர்த் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், செலவிற்கு பணம் தேவைப்படுவதால் அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அறையில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாததால், அங்கு வந்த மற்றொரு நபரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்துக்கொடுக்குமாறு கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் ஏடிஎம் பின் நம்பரை பெற்றுக்கொண்டு, ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை எனக்கூறி, அந்த நபர் தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டை லட்சுமணனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனடியாக எஸ்கேப் ஆகியுள்ளார்.
வீட்டிற்கு வந்த லட்சுமணன் தனது செல்போனில் வந்த குறுஞ்செய்தியில் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்ததாக வந்ததையடுத்து, அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய அரியாங்குப்பம் காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்டது கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பதும், அவர் சென்னையில் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் வேலையில்லாத காரணத்தால், இதுபோன்ற நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுமட்டுமின்றி இதற்கு முன் இரண்டு முறை இதுபோன்று மற்றவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளார். பணத்தின் மதிப்பு குறைவானது என்பதால் அவர்மீது யாரும் புகார் கொடுக்க வராததால் இதுநாள் வரை தப்பித்து வந்துள்ளார். இந்த முறை பெரிய தொகை எடுத்ததால் முருகன் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
இதையடுத்து முருகனின் வீட்டிற்குச் சென்று காவலர்கள் அவரை தேடினர். ஆனால், அவர் அங்கு இல்லாததால், ஏடிஎம் சென்டர்களில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது, தவளக்குப்பம் ஏடிஎம் சென்டர் முன் நின்று கொண்டிருந்த முருகனை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு, பின் நம்பர் போன்றவற்றை கொடுக்கக்கூடாது என பொதுமக்களிடம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:மாலை, மெழுகுவர்த்தி, கண்ணீர் அஞ்சலி - ஏடிஎம் மையத்துக்கு வந்த சோதனை!