ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டும் மவுனம் சாதித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் உரசல் ஏற்படும் போதெல்லாம், அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்துள்ள சானியா மிர்சாவை வம்பிழுப்பது நமது நெட்டிசன்களின் வழக்கம். அந்த வகையில் இம்முறையும் சமூகவலைதளங்களில் சானியா மிர்சாவை சிலர் விமர்சித்துள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சானியா மிர்சா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், ``பிரபலங்கள் தங்கள் தேசப்பற்றைக் காட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்றத் தாக்குதல்களைக் கண்டித்து பதிவிட வேண்டும் என எண்ணுபவர்களுக்காக இந்தப் பதிவு. ஏனென்றால், வெறுப்பு மற்றும் உங்களின் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்புக் கிடைக்காததால், எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாதத் தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்க வேண்டும் என்பதில்லை.
அதேபோல், எனது வீட்டு மொட்டை மாடி மீது நின்று கொண்டும், சமூக வலைதளங்களில் கூவிக் கூவி எனது எதிர்ப்பைக் காட்ட வேண்டியதில்லை. தீவிரவாதம் எந்தவகையில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. அதேபோல், அதைப் பரப்புபவர்களும் வன்மையான கண்டனத்துக்குரியவர்களே.
சரியான முறையில் சிந்திக்கும் அனைவருமே தீவிரவாதத்துக்கு எதிரானவர்களே. அப்படி இல்லையென்றால், அதுதான் பிரச்னை. நான் எனது நாட்டுக்காக வியர்வை சிந்தி விளையாடுகிறேன். அப்படித்தான் எனது நாட்டுக்கு நான் சேவை புரிகிறேன். தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.