இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளையும், வயதானவர்களையும் தோளில் சுமந்துகொண்டு, நகரத்தை விட்டு வெளியேறிவருகின்றனர்.
நீண்டதூரம் பயணப்படும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் அவர்களின் பயணத்திற்கான செலவை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி செலுத்துவதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார். இதனையடுத்து, இந்தியா முழுவதுமுள்ள அக்கட்சியினர் ஊரடங்கால் சிக்கித்தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிக்கித்தவித்து வந்த தொழிலாளர்களுக்கு அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப 1,000 பேருந்துகளை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்து அம்மாநில அரசிடம் ஒப்படைத்தார்.
பேருந்துகள் தலைநகர் லக்னோவுக்கு வந்து சேர்ந்த நிலையில், அவற்றைச் சோதனை செய்த நிர்வாகம் 297 பேருந்துகளுக்கு உரிய தகுதிச் சான்றிதழோ, காப்பீடோ இல்லை என்று கூறி பயணத்திற்குத் தடை விதித்தது. மேலும், ஆவண மோசடியில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லுவை கைது செய்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரினேட், “கடந்த நான்கு நாள்களாக மாநில அரசு சிறுபிள்ளைத்தனமான அரசியலைச் செய்து வருகிறது. இது வேதனை அளிக்கிறது. அரசின் வேண்டுகோளின்படி இந்தப் பேருந்துகள் அனைத்தையும் நாங்கள் அவர்களுக்கு அனுப்பியிருந்தோம்.
அவர்களின் நோக்கம் சரியாக இருந்தால், நாங்கள் அனுப்பிய வாகனங்கள் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் இடுகையிடுவதையோ அல்லது பத்திரிகைகளுக்கு கசியவிடுவதையோ விட, பிழைகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்திருப்பார்கள். சோதனை செய்த பிறகும் வாகனங்களை இயக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
பேருந்துகளில் பிரச்னை இருந்தால், அவற்றை நிறுத்திவைத்து மற்றவற்றை இயக்க அனுமதிக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. அந்தப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், தற்போது 92,000 தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றிருப்பார்கள். இந்த மக்களின் வேதனையையும் துன்பத்தையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன, இதற்காக காங்கிரஸ் சுமார் 4.80 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. சிக்கித் தவிக்கும் ஏழை மக்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் வாடகை செலுத்தியுள்ளோம். ஆனால், இதனை வைத்து பாஜக அரசு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜகவின் இந்த ஆணவத்தால் கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் மக்களைக் காக்கும் பணியில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை” என்றார்.
இதையும் படிங்க : ராஜிவ் காந்தி நினைவுநாள்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி