பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் நலன்கள் தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர், நரேந்திர சிங் தோமர், 'மானாவாரி பருவத்தின் 14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில், பயிர்களின் செலவில் 50 முதல் 83 விழுக்காடு வரை லாபம் சேர்க்கப்பட்டுள்ளது.
வேளாண்செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அறிவிப்பு அர்த்தமற்றது என்று நாட்டின் பல்வேறு விவசாயக் கூட்டமைப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவரும், அதன் செய்தித் தொடர்பாளருமான ராகேஷ் ஈடிவி பாரத்திற்கு அளித்தப் பேட்டியில், 'விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்காமல், அவர்களை மகிழ்விக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த காலங்களில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்துள்ளது' என்று சாடியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் விவசாயிகளின் அமைப்புத் தொடர்பில் இருப்பதாகவும், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் என்றும் ராகேஷ் தெரிவித்தார்.