டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாய சங்கத்தினர் கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடெங்கிலும் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், வரும் 9ஆம் தேதி ஆறாம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாளை (டிசம்பர் 8) விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதனால், நாளை முழுவதும் கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 20 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாது வங்கி ஊழியர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசியல் கட்சிகளின் ஆதரவை வரவேற்றுள்ள விவசாய சங்க தலைவர்கள், புதிய வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பாரத் பந்தினை தொடர்ந்து டெல்லி-ஹரியானா-உத்தரபிரத எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல் ஈடுபடும்வரை பிரச்னையில் தீர்வை எட்ட முடியாது” - ரவ்னீத் சிங் எம்.பி.,