வணிக வர்த்தக சபை சார்பாக கொல்கத்தாவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கரோனா தொற்றால் வேளாண் துறை பாதிக்கப்படவில்லை என்றும், அதுமட்டுமின்றி கிராமப் பொருளாதாரம் நிலையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மழைக் காலத்தில் பயிரிடப்பட்டு, வசந்த காலத்தில் அறுவடை செய்யப்படும் ராபி பயிர்களை விவசாயிகள் முழுவதுமாக அறுவடை செய்துள்ளனர். சம்பா சாகுபடி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வேளாண் துறைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கிராமப் பொருளாதாரம் நிலையாக உள்ளது. குளறுபடிகள் தீர்க்கப்பட்டதன் மூலம் திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்ததை அரசு உறுதி செய்துள்ளது.
நேரடி பணப் பரிமாற்றம் மூலம் விவசாயிகளுக்கு 17,500 கோடி ரூபாயை பிரதமர் மோடி வழங்கவுள்ளார். இயற்கை விவசாயத்தில் அரசு கவனம் செலுத்திவருகிறது. இதன்மூலம், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி எளிமையாக்கப்படும். அரசு அறிவித்த சீர்திருத்தங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். அதனை விற்க சந்தைக்கு அவர்கள் செல்ல வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: 'அநீதியைக் கண்டு அஞ்சாமல் போரிட வேண்டும்' - ராகுல் காந்தி