அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது.
ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபோனி புயல் தற்போது மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சரியாக 370 கிலோ மீட்டர் தொலைவில் ஃபோனி புயல் தற்போது நிலைக்கொண்டுள்ளது.
இன்று நள்ளிரவில் புயல் மேற்கு வங்கத்தை தாக்கும் என்றும், புயலின் தாக்கத்தின் போது 90 - 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் புயல் வங்க தேசத்தை நோக்கி நகரும் எனவும் கூறப்படுகிறது. இதனால் மேற்கு வங்கத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக, கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஃபோனி புயலின் எதிரொலியாக மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்று வீசி வருகிறது. இதன் விளைவாக பல மின் கம்பங்கள், மரங்கள் அடியோடு சாய்ந்தன. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.