உத்தரப்பிரதேசத்தில், ஆக்ரா பகுதியைச் சேர்ந்த அப்ரார் என்பவரின் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்ராருக்கு வீட்டில் பணிக்கு வரும் அமீர்கான் என்ற 12 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அமீர்கானை வீட்டிற்கு அழைத்து வந்த அப்ரார், மூன்றாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். சிறுவனுக்கு மின்சார ஷாக், சிகரெட் துண்டுகளால் சூடு வைத்தல், வயிறு, முகத்தில் பல முறை உதைத்து நகைகள் குறித்து கேட்டு சித்திரவதை செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, சிறுவனின் வீட்டுக்கு ஆட்களுடன் சென்று சோதனை நடத்திய அப்ரார், அமீரின் தந்தை, தாயார் இருவரையும் இழுத்துவந்து அறையில் அடைத்துள்ளார். பின்னர், இவர்களைத் தேடி வந்த அமீரின் மூத்த சகோதரர் சோனுவையும் அடைக்க முயற்சித்தபோது, அவன் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது, சிறு காயங்களுடன் சோனு சிக்கிக்கொண்டான்.
இதைத் தொடர்ந்து, சோனுவை மருத்துவமனையில் அனுமதிக்க உதவி கோரும் வகையில் அமீரின் அத்தையை அப்ரார் அழைத்துள்ளார். சூழ்ச்சி தெரியாமல் அமீரின் அத்தையும், அவரின் 18 மாத குழந்தையும் சிக்கிக்கொண்டனர். அப்போது உடன் சென்ற அத்தையின் இரண்டாவது மகனான சமீர் துரிதமாக செயல்பட்டு, உறவினர்களைத் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரையும் மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அப்ராரிடம் பணம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல் துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.
சமீர் என்னும் 8 வயது சிறுவனின் துரிதச் செயலால் 36 மணி நேரமாக சாப்பாடு இல்லாமல், அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.