மேற்கு வங்க மாநில பாஜகவின் மூத்த தலைவர்களான அர்ஜுன் சிங், கைலாஷ் விஜயவர்கியா, முகுல் ராய், செளரப் சிங், பவன் குமார் சிங் மற்றும் கபீர் சங்கர் போஸ் ஆகிய ஆறு பேருக்கு எதிராக அம்மாநிலத்தின் காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி பாஜக தலைவர்கள் ஆறு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அம்மனுக்களில், “மேற்கு வங்க மாநில அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவுசெய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்கும் வகையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு தொடர்ந்து இத்தகைய அடாவடியான செயல்களை செய்துவருகிறது.
ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களான அர்ஜுன் சிங், கைலாஷ் விஜயவர்கியா, முகுல் ராய், செளரப் சிங், பவன் குமார் சிங் மற்றும் கபீர் சங்கர் போஸ் ஆகிய 6 பேர் மீது பொய் வழக்குகளை புனைந்துள்ளது. பயங்கரவாதத் கட்டவிழ்த்துவிட்டு, எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரப்வைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை பரப்புரை செய்வதில் இருந்து தடுக்க சதி செய்துள்ளது. எனவே, இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று (டிச.18) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும்வரை மனுதார்களைக் கைது செய்யக் கூடாது என்றும் மனுதாரர்கள் மீதான வழக்குகளின் பின்னணி விவரங்களை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி அளிக்கக்கூடாது?