மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு முன்பாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பெரும்பான்மையில்லாத அரசு ஆட்சி அமைத்தது. பெரும்பான்மையில்லாத காரணத்தால், 80 மணி நேரத்தில் ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் ஃபட்னாவிஸ். பாஜகவின் இந்த முதிர்ச்சியற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிவசேனாவின் தலைமையிலான ஆட்சியிலிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் காப்பாற்றவே ஃபட்னாவிஸ் 80 மணி நேரம் முதலமைச்சராக இருந்தார் என புது விளக்கம் ஒன்றை அளித்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஆனந்த் குமார் ஹெக்டே. முதலமைச்சராக இருந்த 80 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசுக் கருவூலத்திலிருந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசுக்குத் திரும்ப அளித்து சிவசேனா தலைமையிலான அரசிடம் பணத்தைக் காப்பாற்றியதாக ஹெக்டே கூறிய கருத்து புயலைக் கிளப்பியது.
இதையடுத்து இக்கருத்து குறித்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவிக்க, தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், ’’ 40 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து முன்னாள் அமைச்சரின் பேச்சு முற்றிலும் தவறானது. மகாராஷ்டிரா அரசின் ஒரு ரூபாயைக் கூட மத்திய அரசிடம் திரும்பி அளிக்கவில்லை’’ என்றார்.
மேலும், புல்லட் ரயிலுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும்; அது குறித்த செயல்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் ஃபட்னாவிஸ்.
இதையும் படிங்க: பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.!