மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்ற பாஜக தலைவர்களுடன் ஒன்றிணைந்து, அக்கட்சியின் அலுவலகம் முன்பு, ஆளும் கட்சியான சிவசேனாவிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பட்னாவிஸ், 'ஊரடங்கு உத்தரவால் விவசாயம் இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்புசாரா துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக சிவசேனா அரசு அளிக்க வேண்டும்' என்றார்.
'மேலும் தங்களின் போராட்டம் சிவசேனா அரசை அகற்றுவதற்கானது இல்லை; மாறாக அரசை விழிப்படையச் செய்வது' எனக் கூறினார்.
மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை; தனிமைப்படுத்தப்படும் மையங்களில் உண்ண உணவு கூட இல்லை; உத்தவ் தாக்கரே அரசு கரோனா பாதிப்பைக் கையாளுவதில் பெரும் தோல்வியடைந்துள்ளது என்று பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, தொடர்ந்து தனியார் மருத்துவனையில் 80 விழுக்காடு அரசு மருத்துவமனையில் பெறும் கட்டணத்தைப்போல் வாங்க வேண்டும் என பட்னாவிஸ் வலியுறுத்தினார்.
கரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் 41 ஆயிரத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உள்ளதால், அம்மாநிலம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.