தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகில் சுசன்னா என்பவர் தனது எட்டு வயது மகன் தினேஷ் காணாமல் போய்விட்டதாக குஷைகுடா காவல் நிலையத்தில்2011ஆம் ஆண்டுபுகார் அளித்தார். அதன்படி காவல் துறையினரும் வழக்குப்பதிந்து சிறுவனை தேடிவந்தனர்.
ஆனால், சிறுவனை காவல் துறையினரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில், எட்டு ஆண்டுகள் கழித்து அண்மையில் சுசன்னா, தனது மகன் பெயரான தினேஷ் என முகநூல் தேடுபொறியில் பதிவிட்டு, அப்படியாவது தம் மகன் கிடைக்கமாட்டானா...! என்ற ஆசையில் தேடியுள்ளார்.
அப்போது, தினேஷ் ஜன லிமா என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கை பார்த்துள்ளார். அதில், அவருக்காக இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! சுசன்னா தினேஷின் புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்து தன் மகன்தான் என உறுதிபடுத்திக் கொண்டார். இது குறித்து, ரச்சகொண்டா தொழில்நுட்ப குற்றவியல் (சைபர் கிரைம்) காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர், அந்த முகநூல் கணக்கை தீவிரமாக தேடிப்பார்த்ததில், சிறுவன் பஞ்சாப் மாநிலம், அம்ரிட்சர் மாவட்டத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அங்கு சென்று சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
எட்டு ஆண்டுகள் கழித்து தனது 16 வயது மகனை திரும்ப கண்டதில் தாயும் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் பேசுகையில், சொல்ல வார்த்தைகள் இல்லா ஆனந்தமாய் இருக்கிறது என மகிழ்ச்சிபொங்க தெரிவித்தனர்.