பாஜக தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதமான பேச்சுக்கு எதிராக, பேஸ்புக் நிறுவனம் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என முன்னதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே, புகழ்பெற்ற வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், இந்தியாவில் பணிபுரியும் பேஸ்புக் உயர்மட்ட அலுவலர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக செய்தி வெளியானது.
பேஸ்புக் நிர்வாகி அங்கி தாஸ், மோடியின் பேத்தி என்றழைக்கப்படுவதாக பிரபல பத்திரிகையான 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டது. இதையடுத்து, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பாஜக தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தி தேர்தல் ஜனநாயகத்தில் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்கிடையே, பேஸ்புக் நிறுவனத்தின் உயர் மட்ட அலுவலர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு, அவர்களுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் நிலைக்குழுவின் தலைவராக உள்ள சசி தரூர் உரிமை மீறி செயல்பட்டதாகவும், அவரை நீக்க வேண்டும் எனவும் பாஜக எம்பியும் நிலைக்குழுவின் உறுப்பினருமான நிஷிகாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சொந்த அரசியல் கட்சித் தலைவர்களை திருப்திபடுத்தும் நோக்கில் நிலைக்குழு உறுப்பினர்கள் செயல்படக் கூடாது. நிலைக்குழுவை அரசியல் ஆதாயம் தேடும் அமைப்பாக மாற்றக் கூடாது. உறுப்பினர்களை ஆலோசிக்காமல் இவ்விவகாரத்தில் முடிவெடுக்க நிலைக்குழு தலைவருக்கு அதிகாரம் இல்லை" என்றார்.
சசி தரூருக்கு ஆதரவாக பேசியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும் நிலைக்குழு உறுப்பினருமான மஹுவா மோய்த்ரா, "யாருக்கு நோட்டீஸ் அனுப்புவது, எப்போது அனுப்புவது உள்ளிட்ட முடிவுகளை எடுப்பதில் நிலைக்குழு தலைவருக்கு உரிமை உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ”பிரதமர் பதவி தேடி வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்தவர் ராகுல் காந்தி!”