கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. பல இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுவருகிறது.
உயிரைக் காப்பாற்ற முகக்கவசம் அணிய அறிவுறுத்தினாலும், விதவிதமான பாதுகாப்பற்ற முகக்கவசம் வாங்கி அணிந்துகொள்வதில்தான் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக குழந்தைகளைக் கவர கார்ட்டூன் படங்களைக் கொண்ட முகக்கவசங்களும், இளைஞர்களைக் கவர பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் அடங்கிய முகக்கவசங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், முகக்கவசம் அணிந்தால் தங்களை நண்பர்களுக்கு அடையாளம் தெரிவதில்லை எனப் பலரும் தாங்கள் படும் சிரமங்களைக் கூறிவருகின்றனர்.
இப்பிரச்னையைச் சரி செய்யும்விதமாக புதிய முயற்சியை கேரளா டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ கையில் எடுத்துள்ளது.
கேரளாவில் கோட்டயம் பகுதியில் இயங்கிவரும் பீனாஸ் ஸ்டுடியோ, வாடிக்கையாளர்களின் முகங்களை முகக்கவசங்களில் அச்சிடும் பிரிண்டிங் மாஸ்க் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
போட்டோ வழங்கிய 15 நிமிடங்களுக்குள் முகம் காட்டும் முகக்கவசம் வாடிக்கையாளரின் கைக்கு வந்துவிடுகிறது. இதற்குக் கட்டணமாக ரூ.60 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வாடிக்கையாளரிடம் போட்டோ இல்லையென்றாலும், ஸ்டுடியோவிலேயே புகைப்படம் எடுக்கப்பட்டு அச்சிட்டு வழங்கப்படுகிறது.
இதற்கு, கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. பிரிண்டிங் மாஸ்க் தயாரிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, பலர் முகத்தை அச்சிடும் முகக்கவசம் வாங்குவதில் மும்முரம் காட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்ற பெண்!