ஃபோனி புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வடக்கு இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் நாடுகளான இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மீயான்மர், ஒமன், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகியவை ஒரு அமைப்பின் கீழ் வரவழைக்கப்பட்டு அது புயல்களுக்கான பெயர்களை அந்த அமைப்புக்கு வழங்கும். இதன் மூலம் ஒரு நாடு எட்டு பெயர்களை தேர்வு செய்து எதிர்காலத்தில் வரவிருக்கும் புயல்களுக்கு பெயர் சூட்டப்படும்.
இந்த அடிப்படையில்தான் 64 பெயர்கள் உள்ள பட்டியலில் ஃபோனி பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தை தாக்கிய டிட்லி புயலுக்கு பெயர் வழங்கியது பாகிஸ்தான். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரளாவை தாக்கிய ஒக்கி புயலுக்கு பெயர் வழங்கியது தாய்லாந்து. எதிர்காலத்தில் வரவிருக்கும் புயல்களுக்கு இந்தியா அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லிஹர், மேக், சாகர், வாயு ஆகிய பெயர்களை தேர்வு செய்து அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.
மக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்கு பழக்கத்தில் இருக்கும் சுலபமான பெயர்களை தான் அமைப்பிடம் சமர்பிக்க வேண்டும். இது குறித்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை பேரழிவில் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்வதற்காகதான் பழக்க வழக்கத்தில் இருக்கும் எளிமையான பெயர்களை சூட்டி மக்களிடம் புயலின் தாக்கத்தை கொண்டு செல்கிறோம். அதன் தன்மையை வைத்து அழைப்பதற்கு பதில் பெயர்களை பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும்" என்றார்.