இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கரோனா பாதிப்பு காரணமாக குறைந்த தொழிலாளர்களை கொண்டு வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டித்துள்ளது. ஆனால், கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை வேலை நேரத்தை நீட்டிப்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. வேலை நேரத்தை நீட்டிப்பதில் கர்நாடக அரசு மவுனம் காத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஏ.சிவராம் ஹெப்பர் கூறுகையில், "கரோனாவால் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகிறோம். வேலைப்பழு அதிகமாகும் பொழுது, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஊரடங்கு நேரத்தில், வேலை நேரத்தை மட்டும் நீட்டித்து என்ன லாபம்? அவ்வாறு வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதில், தொழிலாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் எவ்வித பயனும் அளிக்காது.
கரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தொழில் நிறுவனங்களை திறக்காமல், தொழிலாளர்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள். எனவே, நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகே வேலை நேரம் நீட்டிப்பது அவசியமா என்பதை பின்னர் தெரிவிக்கப்படும்.
குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர (MSME) நிறுவனங்கள் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி வேலையிழப்பு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்பதையும் அரசுக்கு உறுதிப்படுத்த வேண்டும். எம்.எஸ்.எம்.இ மற்றும் தொழிலாளர்கள் இருவரின் நலன்களை கருத்தில் கொண்ட அரசு செயல்படுகிறது. வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த தங்கள் மாநிலத்தவர்களை மீட்க முனைப்புக் காட்டப்படவில்லை'