கேரள மாநிலம் மலப்புரத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய அன்னாசிப் பழம் உண்டதால் தாடைப்பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு, பற்களை இழந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி பேசுபொருளாக்கியுள்ளது.
இதன் சுவடு ஆறுவதற்குள்ளாகவே, ஹிமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரிலுள்ள ஜன்துதா பகுதியில் கர்ப்பிணி பசுவிற்கு வெடிபொருள் நிரம்பிய உணவு அளிக்கப்பட்டதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.
இந்த காணொலியைப் பதிவிட்ட குர்தியால் சிங் என்பவர், “கர்ப்பிணி பசுவிற்கு தனது வீட்டிற்கு அருகில் இருப்பவர் வெடிபொருள் நிரம்பிய உணவுப்பொருளை கொடுத்துள்ளார். இதனால் பசுவின் தாடைப் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர் மேல் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் காணொலியால் விலங்குகளின் பாதுகாப்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த காணொலி குறித்து மக்கள் பலர் கேள்வி எழுப்பியதையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகிறது.
சம்பவ இடத்திலிருந்து சில பொருள்களைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
உணர்வுப்பூர்வமான இந்த வழக்கில் யாரேனும் குற்றம் செய்தவர்களாகக் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.