குஜராத்தின் பருச் மாவட்டத்தில் தஹேஜ் நகரில், மேஜர் யாஷஸ்வி என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது.
இந்நிலையில், இன்று ரசாயன தொழிற்சாலையில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கு பணியாற்றி வந்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் துரிதமாகச் செயல்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொழிற்சாலையில் மிகவும் அபாயகரமான ரசாயனங்கள் இருந்த காரணத்தினால் தொழிற்சாலையைச் சுற்றியிருக்கும் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெடி விபத்தால் தொழிற்சாலையைச் சுற்றி கரும்புகை இருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் 15 வகையான ரசாயன பொருள்கள் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.