இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர், அதனைச் சுற்றியுள்ள பல தொழிற்சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இது அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தினசரி கூலிகளின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.
நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அவர்களது வசித்து வந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகையை செலுத்த முடியாமல் இருந்த இடத்தைவிட்டு காலி செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த இந்த தொழிலாளர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
இத்தகைய கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த தொழிலாளர்கள் பேசியபோது, “தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என எதுவுமே தெரியவில்லை. எங்களின் நிலை குறித்து விசாரிக்க எந்த அரசாங்க அலுவலரும் இதுவரை வரவில்லை. ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்புக் குழுக்களால் தினமும் உணவுப் பொட்டலங்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி வருவதாக அரசாங்கம் சொல்வது பொய்” என்று கூறினர்.
நில உரிமையாளர்கள் தங்கள் வாடகைதாரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. அரசாங்க அறிவிப்புகள் இன்னும் அடித்தட்டு மக்களை போய் சேரவில்லை, இன்னும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் அது எடுத்த பல்வேறு முடிவுகள் ஏழை எளிய மக்களை அடைய நீண்ட நேரம் எடுக்கும் என்று தெரிகிறது.
அதனை விரைந்து செயல்படுத்தினால் தான் பெருந்தொற்று பரவலைத் தடுக்க அரசு அறிவித்திருக்கும் முழுமையான ஊரடங்கு நடைமுறைக்கு வரும்.
இதையும் படிங்க : கரோனா பெருந்தொற்று : உணவின்றி தவிப்போருக்கு உணவு வழங்கி வரும் அதிமுக எம்எல்ஏ!